நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நிர்மலாதேவி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சுமார் ஓராண்டுக்கு பிறகு 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நிர்மலாதேவி விவகாரத்தில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலரை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் தங்களது விசாரணையை நடத்தியுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிபிசிஐடி விசாரித்து குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்த தடையையும் நீக்கி உத்தரவிட்டனர்.