திண்டுக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவ மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவ மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகலாந்து மாநிலப் பதிவெண் கொண்ட எஸ்.பி.எஸ். டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்தானது நேற்று மாலை கொச்சியில் இருந்து மதுரை புறப்பட்டது. படுக்கை வசதி கொண்ட அந்த சொகுசுப் பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பேருந்தை பல்லடத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (49) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், திண்டுக்கல் - மதுரை 4 வழிச்சாலையில் கொடைரோடு டோல்கேட் மையத்துக்கு முன்பாக கொழிஞ்சிப்பட்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த பேருந்து சாலை ஓரம் வைக்கப்பட்டு இருந்த வரவேற்பு பலகை மீது பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கூச்சலிட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். பின்னர், படுகாயமடைந்த 15 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி கேரளாவைச் சேர்ந்த மரிய ஜோஸ் (26) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு எம்.டி. உயர் படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.