அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்து வந்த வடகிழக்கு பருவ மழை ஜனவரி 10ம் தேதியுடன் முற்றிலும் விலகியது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்த போதும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவான அளவில் மழை பதிவாகியிருக்கிறது. இதனால் வரும் கோடைகாலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பருவ மழை நிறைவடைந்து விட்டபோதும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மலையை ஒட்டிய பகுதிகளில் அதிகமான பனிப்பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தென்கடலோர பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
Also Read: தனியாக கழண்டு ஓடிய சொகுசு பேருந்து டயர்..! பயங்கர அதிர்ச்சியுடன் உயிர் தப்பிய பயணிகள்..!