கோர்ட் -னா என்னனு நினைச்சீங்க ..?- எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்..!

By Thanalakshmi VFirst Published Nov 25, 2021, 3:17 PM IST
Highlights

நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், சரியாக வேலை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே என கருத்து தெரிவித்துள்ளது.
 

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து வணிக நோக்கில் கட்டிய கட்டுமானத்தை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் “கோயில் தெப்பக்குளத்தின் கலைத் தோற்றத்தை மறைக்கும் வகையில் நான்கு புறமும் வணிக நோக்கில் கட்டுமானங்கள் உள்ளன. நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. தெப்பக்குளத்தில் குப்பை குவிக்கப்படுகிறது. கழிவு நீர் கலக்கிறது. தெப்பக்குளம் மாசடைகிறது. இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் 2011 ல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன்பேரில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின் மேல்நடவடிக்கை இல்லை. ஒரு பகுதியில் 2019ல் சில கடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் கட்டுமானங்களை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். குப்பை குவிப்பது, கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தெப்பக்குளத்தை பழைய நிலைக்கு கொண்டுவந்து பராமரிக்க அறநிலையத்துறை , மாவட்டம், மாநகராட்சி ஆணையர்களுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து  நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் கடைகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சில கடைக்காரர்கள் அறநிலையத்துறையிடம் சீராய்வு மனு செய்துள்ளனர். அது நிலுவையில் உள்ளதாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றவாறு தெரிவிக்கப்பட்டது. அதனை கேட்டு கொண்ட நீதிபதிகள்,  மனுதாரர் தாக்கல் செய்த புகைப்பட ஆதாரங்களை பார்த்து, தெப்பக்குளத்தை கோயில் நிர்வாகம் சரிவர பராமரித்து பேணவில்லை என்பது தெளிவாகிறது என அதிருப்தி தெரிவித்தனர் .மேலும் நீதிமன்றங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் என எச்சரித்த நீதிபதிகள்,பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சரியாக பராமரிக்காத அதிகாரியின் ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பினர். மேலும்  சரியாக தனது பணிகளை செய்யாத அதிகாரியை பணியிட மாற்றம் செய்யலாமே என கருத்து தெரிவித்துள்ளது. முறையாக கோவில் தெப்பக்குளத்தை முறையாக சுத்தப்படுத்த அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர்  1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!