அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அனைத்து பொறுப்புகளையும் வேலைகளையும் நீதிமன்றவே ஏற்கமுடியுமா என கேள்வியெழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், இன்னும் இரண்டு வாரங்களில் ஓடைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கில் ஒன்றில் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஓடை ஆகியவற்றை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு ஓடைகளிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து கடந்த 2020ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளார். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
2 ஓடைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
undefined
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் நீதிமன்றம் ஏற்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் உசிலம்பட்டி வருவாய் மண்டல அலுவலரும், பேரையூர் தாசில்தாரும் சம்பந்தப்பட்ட ஓடைகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நான்கு வாரத்திற்குள் ஓடைகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதி ஒத்திவைத்தனர்.