மதுரை மக்களை கலங்க வைத்த செய்தி..! சித்திரைத் திருவிழா அதிரடி ரத்து..!

By Manikandan S R SFirst Published Apr 18, 2020, 8:37 AM IST
Highlights

இந்தியாவில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகிற 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 13,387 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 437 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூகவிலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஊரடங்கு காலத்தில் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒன்றாக திரள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகிற 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. எனிமும் விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் தடையின்றி நடைபெறும் எனவும் அதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைக்க இருக்கிறார்கள்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவில் நிர்வாகம் சார்பாக இணையதளம் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மே 3ம் தேதி முடிவடைவதால் மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று மதுரை மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பது, ஊரடங்கு முடிந்த பின்னரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடரும் என்பதை உணர்த்துவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

click me!