கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளில் 22,000 படுக்கை வசதிகளும் வென்டிலேட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்திருக்கிறது. இன்னும் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
undefined
இதனால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இருக்கும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளில் 22,000 படுக்கை வசதிகளும் வென்டிலேட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தின் 37 மாவட்ட மக்களுக்கு 18 அரசு மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை வழங்கப்படுவதாக தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது அவை பின்வருமாறு:
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சேலம் மோகன் குமாரமங்களம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை.