வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் தென்மாவட்டங்களில் தற்போது வரை பரவலாக மழை நீடிக்கிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. பல முக்கிய அணைகள் நிரம்பிய நிலையில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தின் வட மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறையத்தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் தென்மாவட்டங்களில் தற்போது வரை பரவலாக மழை நீடிக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
திருநெல்வேலியில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பிரதான அணையான காரையார் நிரம்பி வழிகிறது. பிற அணைகளான சேர்வலாறு, மணிமுத்தாறு போன்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து ஏரி,குளங்கள் நிரம்பியுள்ளன. கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.