குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான டிஎஸ்பி மன்னர்மன்னன் நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆளான டிஎஸ்பி மன்னர்மன்னன் நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், இணை ஆணையர், உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை, மத்திய கலால் துறை உள்ளிட்டவர்களுக்கு ரூ.40 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் போது குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கியர் பட்டியல் அடங்கிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி பின்னர் இந்த விவகாரம் அடங்கிப் போனது.
இந்நிலையில் நாளை ஓய்வு பெற இருந்த ரயில்வேத்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன், குட்கா முறைகேடு வழக்கில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது மதுரை காவல்துறை டி.எஸ்.பி.யாக உள்ள மன்னர்மன்னன், முன்பு புழல் காவல் உதவி ஆணையாளராக இருந்த போது, பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.