மதுரை அருகே விவசாய நிலங்களில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடி முதல் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி வரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை இணைத்து நான்கு வழிச்சாலை அமைக்க மத்தியஅரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகள் அங்கே முழுவீச்சில் நடந்து வருகிறது.
undefined
அந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் சாலை ஓரம் இருக்கும் நிலங்களை உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக வடமாநில தொழிலாளர்கள் விளைநிலங்கள் மண்ணை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இந்த சாலைக்கு ஆரம்பம் முதலே அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கு இந்த திட்டத்தை கைவிட கூறி பலமுறை கடிதம் எழுதி இருக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் மண் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திரண்ட விவசாயிகள் பலர் அவர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தொடங்கினர். மேலும் நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.