மதுரை அருகே பைக் ஒன்று குறுக்கே வந்ததில் காரில் பயணம் செய்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது மகளுடன் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி . மிகப்பெரிய செல்வந்தரான இவருக்கு அந்த பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருக்கிறது . ராமநாதபுரத்தில் மட்டுமின்றி மலேசியா போன்ற நாடுகளிலும் சொந்தமாக உணவகங்கள் நடத்தி வருகிறார் .
இந்த நிலையில் மலேசியாவில் சென்றிருந்த இவர் விமானம் மூலம் மதுரை வந்திருக்கிறார் . அங்கிருந்து காரில் தனது மகள் தஸ்லிமா பானு ரசியா மற்றும் மருமகன் முகமதுவுடன் சாத்தன் குளத்திற்கு சென்றுகொண்டிருந்தார் . கார் சோமபுரத்தை கடந்து நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது .
அப்போது இருசக்கர வாகனத்தில் சங்கர் என்பவர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார் . வேகமாக வந்த கார் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக உஸ்மான் அலி காரை திருப்பி இருக்கிறார் . ஆனால் இருசக்கர வாகனம் மீது மோதிய கார் பல்டி அடித்து தடுப்பு சுவரில் மோதியது . அப்பளம் போல நொறுங்கிய காரில் இருந்த உஸ்மான் அலியும் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே பலியாயினர் . இருசக்கர வாகனத்தில் வந்த சங்கரும் பரிதாபமாக உயிரிழந்தார் .
பலத்த காயமடைந்த உஸ்மான் அலியின் மருமகன் முகமது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .