இந்நிலையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலர் உள்ளே புகுந்து பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்களுக்கான ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஆர்வமாக உள்ள மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி, மேலூர், மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 6 ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்காக 487 இடங்களில் 939 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 403 வாக்களார்கள் வாக்களிக்க உள்ளனர்.
அங்குள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிக்காக 7,648 பணியாளர்களும், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் சிலர் உள்ளே புகுந்து பிரசாரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் வாக்குச்சாவடி மையத்தில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு வேட்பாளர்களை வெளியில் அனுப்பிவைத்ததால், வாக்குச்சாவடி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.