மதுரை அருகே சாதி தீண்டாமை காரணமாக பொது மயானத்தில் இறந்து போனவரின் உடலை எரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை திருமங்கலம் தாலுகாவில் இருக்கும் பேரையூர் அருகே இருக்கிறது பி.சுப்புலாபுரம் கிராமம். இங்கு பட்டியலின மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் மரணமடையும் பட்டியலினத்தவர்களின் உடலை ஊரின் பொது மயானத்தில் எரிக்க எதிர்ப்பு தெரிவித்து மற்ற சாதியினர் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மயானத்தின் வெளியே வெட்ட வெளியில் உடலை எரியூட்டி வந்திருக்கின்றனர். இதுகுறித்து ஊரின் மற்ற சாதியினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் அனுமதி மறுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு தொடர் மழை பெய்திருக்கிறது. இதனால் உடலை வெட்ட வெளியில் எரியூட்ட முடியாது என்பதால் பொது மயானத்தில் தகனம் செய்ய அனுமதி கேட்டிருக்கின்றனர். அப்போதும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக வேறு வழியின்றி இறந்து போனவரின் உடலை கொட்டும் மழையில் எரித்திருக்கின்றனர். தொடர்ந்து மழையில் உடல் நனைந்ததால் சரியாக எரியாமல் இருந்திருக்கிறது. இதனால் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுக்கென்று தனி மயானம் அமைத்து தர அந்த கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.