வெறும் கையால் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்! மதுரை ரயில் நிலையத்தில் அவலம்!

By SG Balan  |  First Published Jun 26, 2023, 9:06 PM IST

ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த முறை தூய்மைப் பணியாளர்களின் குறைதீர்ப்புக் கூட்டத்தில் ரயில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்று புகார் கூறினர்.


மதுரை ரயில்வே கோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ரயில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கைகளால் சுத்தம் செய்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை மாலை இது தொடர்பான வீடியோ ஆதாரம் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த முறை தூய்மைப் பணியாளர்களின் குறைதீர்ப்புக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் தலைமை வகித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

காங்கிரசுக்குத் தாவிய 12 முன்னாள் அமைச்சர்கள்! தெலுங்கானாவில் கேசிஆர் கட்சிக்குப் பின்னடைவு

அப்போது தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்தனர். மிகக் குறைந்த சம்பளமே தங்களுக்கு வழங்கப்படுகிறது, வார விடுமுறை இல்லாமல் மாதம் முழுவதும் பணிபுரியச் சொல்கிறார்கள் என பல்வேறு குறைகளை கூறி, தூய்மைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக, தங்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல், ரயில் பெட்டிகளில் உள்ள பயோ-டாய்லெட்டுகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் முறையிட்டனர். அவர்கள் கையுறை கூட அணியாமல் ரயிலில் உள்ள கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்யும் வீடியோவையும் அவர்கள் காட்டினர்.

வீடியோவைப் பார்த்த ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன், இந்த வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், வீடியோக்களை சரிபார்த்த பிறகு ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். மேலும், குற்றச்சாட்டு உறுதியானால், அந்நிறுவனத்துடன் போட்டப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு எதுவும் விளக்கமளிக்காததால், தங்களது வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சலுகைகளை மாற்றுவதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். சம்பளத்துக்கான ரசீது எதுவும் கொடுக்காமல், குறிப்பேட்டில் கையொப்பம் பெற்றுக்கொள்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். ரயில்வே அனுமதித்த தொகைக்கும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு வழங்கிய தொகைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

சில பெண் தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களுக்கு போனஸ் தொகை கிடைக்கவில்லை என்கிறார்கள். பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான வழிமுறை என்ற என்று தங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர். ஊழியர்கள் கூறிய அனைத்து புகார்கள் மீது முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் வெங்கடேசன் கூறினார்.

click me!