இந்தியாவில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருந்துத் தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்து இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் அரசு சார்ந்த அனைத்து ஆக்ஸிஜன் கம்பெனிகள் மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியாவில் மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்ய நீதின்றத்திற்கு அதிகாரம் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் தற்போதைய மருத்துவ சூழலை நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவைப்படும் நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தும் என்றும் கூறி இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.