பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த 150 கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் பலிகொடுக்கப்பட்டு பிரியாணி படையல் தடபுடலாக தயாராகியது. பின் நள்ளிரவில் சுவாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலையில் படையல் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கிறது வடக்கம்பட்டி கிராமம். இங்கு முனியாண்டி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு குலதெய்வ கோவிலாக இருக்கிறது. கோவில் கொடை, காது குத்து போன்ற விழாக்களில் மக்கள் திரண்டு கிடா வெட்டி விருந்து வைப்பர். அதே போல ஒவ்வொரு வருடமும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பிரியாணி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
85வது வருடமாக நேற்றும் பிரியாணி திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு வார காலமாக பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் இரவில் பிரியாணி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த 150 கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் பலிகொடுக்கப்பட்டு பிரியாணி படையல் தடபுடலாக தயாராகியது.
பின் நள்ளிரவில் சுவாமிக்கு பிரியாணி படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலையில் படையல் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டது. இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பல்வேறு இடங்களில் காணப்படும் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உணவகத்தின் உரிமையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!