அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் தமிழக ராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருக்கிறது சோளம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் நாகராஜன். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் இவரின் மகன் பாலமுருகன். சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் பாலமுருகன். அதன்படி கடந்த 2010ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்தார்.
ராணுவத்தில் பொக்லைன் ஓட்டுநராக கடந்த 9 வருடங்களாக பாலமுருகன் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் ராணுவ முகாம் ஒன்றில் வீரர்களுடன் அவர் தங்கியிருந்தார். ராணுவ முகாமினை அந்த இடத்தில இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளனர். அப்போது பாலமுருகன் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். சக வீரர்கள் பாலமுருகனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருக்கும் மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாலமுருகன் உயிரிழந்த தகவல் மதுரையில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. பணியில் இருக்கும் போதே பாலமுருகன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு அவர்கள் கதறி துடித்தனர். பாலமுருகனின் உடல் சொந்த ஊரில் கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட தேவையான நடவடிக்கைகள் நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது.