
Amit Shah Harshly Criticized DMK in Madurai: பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று மதுரையில் வேலம்மாள் திடலில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமித்ஷா, ''மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். ஜுன் 22ம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டை நீங்கள் சிறப்பாக நடத்தி தர வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு வந்து தமிழில் பேச முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக, பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, ''அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வருக்கு நான் சொல்கிறேன். என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் நான். 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் திமுகவை தூக்கி எறிவார்கள்'' என்றார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய அமித்ஷா
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய அமித்ஷா, ''ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழ்நாட்டில் இருந்து மிகப்பெரிய குரல் ஒலித்தது பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்களின் நாட்டுக்கே சென்று அழித்தோம். மக்கள் மற்றும் நமது ராணுவத்தின் துணையுடன் பிரதமர் மோடி பயங்கரவாதிகளை அழித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவு ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
மேலும் திமுகவை சரமாரியாக சாடிய அமித்ஷா, ''2026 சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்தியது போல் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுகவையும் பாஜக வீழ்த்தும். தென் தமிழகத்தில் சாதி, பிரிவினைவாதத்தை முன்வைத்து திமுக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி விட்டன. ஆனால் இது குறித்து தமிழக முதல்வருக்கு எந்தவித அக்கறையும் இல்லை.
திமுக அரசு ஊழவில் திளைக்கிறது
திமுக அரசு 100க்கு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசு. திமுக ஊழவில் திளைக்கிறது. ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசு வழங்கும் பணத்தை திமுக அரசு மடைமாற்றம் செய்கிறது. ஊழலில் மட்டுமல்ல; சாராயத்தாலும் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. தென் தமிழகத்துக்கு எதுவுமே செய்யாமல் திமுக துரோகம் செய்கிறது. திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தர் மலை என திமுக அரசு சொல்கிறது.
உயர்கல்வியில் தமிழை கொண்டு வராதது ஏன்?
தமிழ், தமிழ் எனக் கூறும் திமுக, உயர்கல்வியில் தமிழை கொண்டு வராதது ஏன்? பாடத்திட்டத்தை தமிழில் தர மறுப்பது ஏன்? காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தான் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு தேர்தலில் திமுகவை வீழ்த்த பாஜக தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.