மதுரை ரயில்வே கோட்டம் ஈட்டிய வருமானம் ரூ.1,245 கோடி; தெற்கு ரயில்வே ஹேப்பி!

Published : Jun 06, 2025, 10:29 AM ISTUpdated : Jun 09, 2025, 12:03 PM IST
Indian Railway

சுருக்கம்

மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மதுரை ரயில்வே கோட்டத்தின் சார்பாக 69 வது ரயில்வே வார விழா புதன்கிழமை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''இது நமது கடும் உழைப்பால் விளைந்த சாதனைகளை திரும்பிப் பார்க்கும் நேரம். இந்த வளர்ச்சிக்காக உழைத்த ஒவ்வொருவரையும் பாராட்டுகின்ற சமயம்'' என்றார்.

மதுரை ரயில்வே கோட்டம் ரூ.1,245 கோடி வருமானம்

தொடர்ந்து பேசிய அவர், ''ரயில்வே ஊழியர்கள் அனைவரது ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1,245 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டம் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு ஓய்வு அறைகள்

மேலும் இது தொடர்பாக விரிவாக பேசிய சரத் ஸ்ரீவத்சவா, ''ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்களில் 15 படுக்கைகள் கொண்ட ஓடும் தொழிலாளர் ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள் கோரிக்கையான தூய்மையான நவீன கழிப்பறைகள் காரைக்குடி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை மேலாண்மை திட்ட செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ரயில் ஓட்டுநருக்கு நல்ல விஷயம்

இதன் மூலம் ஓய்வு அறைகள் காலியாக உள்ள நிலவரம் பற்றியும், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ரயில் ஓட்டுநரை அவர் பணியாற்ற வேண்டிய ரயில் புறப்படுவதற்கு முன்பு அவரை நினைவுபடுத்த ஓய்வு அறை அலுவலருக்கு தாமாக குறுஞ்செய்தி அனுப்புவதும் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும். ஓய்வு அறைகளில் உள்ள குறைபாடுகளை தெரிவிக்க கியூ ஆர் கோடு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக புகார்களை தெரிவிக்கவும் அவற்றை உடனடியாக களையவும் பிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணிமனைகளில் சிசிடிவி கண்காணிப்பு

ரயில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 பார்சல் அலுவலகங்கள் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகளில் சிசிடிவி கண்காணிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே கேட்டுகளில் தகவல் தொடர்புக்காக குரல் பதிவு செய்யும் போன்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் 649 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர் வாரிசுகளுக்கு கல்வி நிதி உதவி

கடந்தாண்டு பெறப்பட்ட ஊழியர் உதவி நிதி ரூபாய் 21.45 லட்சத்தில் ரயில்வே ஊழியர் வாரிசுகளுக்கு கல்வி நிதி உதவி, உடல் நலம் குன்றிய ஊழியர்களுக்கு உதவி, ரயில்வே மனமகிழ் மன்றம், மகளிர் நலன் போன்றவற்றிற்காக ரூபாய் 20.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 497 ஊழியர்களின் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 217 ஓய்வூதியர்கள் மற்றும் 74 குடும்ப ஓய்வூதியதாரர்கள் குறைகள் களையப்பட்டு ரூபாய் 9.93 லட்சம் அளவிலான பணப்பயன்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,323 ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்
தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!