190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

By Manikandan S R S  |  First Published Mar 3, 2020, 10:16 AM IST

தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து மதுரையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை சுமார் 190 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது உயிரை பணயம் வைத்து 1 மணி நேரம் 50 நிமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனையை வெற்றிகரமாக அடைந்தார். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினரிடம் அப்பெண்ணின் கல்லீரல் கொடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.


நேற்று தஞ்சாவூரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 25 வயது நிரம்பிய இளம் பெண் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் பெண்ணின் பெற்றோரிடம் எடுத்துக் கூறினர். பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே இளம் பெண்ணின் உடலில் இருந்து கல்லீரல் எடுக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது நிரம்பிய நோயாளி ஒருவருக்கு கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு உடலுறுப்பு தான கழகத்தின் அனுமதி பெற்று உயிரிழந்த பெண்ணின் கல்லீரல் வெளியே எடுக்கப்பட்டது. பின் அவசரகால ஆம்புலன்ஸ் மூலமாக கல்லீரல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Tap to resize

Latest Videos

ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார். தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து மதுரையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனை சுமார் 190 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது உயிரை பணயம் வைத்து 1 மணி நேரம் 50 நிமிடத்தில் அப்பல்லோ மருத்துவமனையை வெற்றிகரமாக அடைந்தார். அங்கு தயாராக இருந்த மருத்துவ குழுவினரிடம் அப்பெண்ணின் கல்லீரல் கொடுக்கப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அவசரகால ஆம்புலன்ஸ் செல்லும்போது அதற்கு முன்பாக காவல்துறை வாகனம் ஒன்று பொதுமக்களை எச்சரித்தபடி சென்றது. வரும் வழியிலும் ஆம்புலன்ஸிற்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை காவல்துறையினர் ஏற்கனவே சீர்படுத்தி வைத்திருந்தனர். பல்வேறு இடங்களில் பொதுமக்களும் தாமாக முன்வந்து ஆம்புலன்ஸ் செல்வதற்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் கல்லீரல் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கூறும் போது சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் கவனத்துடன் வேகமாக வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது போன்று பல உயிர்களை காப்பாற்றி இருப்பதாக கூறிய சுப்ரமணியன், இச்செயல் தனக்கு நிம்மதியை தருவதாக கூறியுள்ளார். ஒரு உயிரை காப்பாற்ற தனது உயிரைப் பயணம் வைத்து வந்த ஓட்டுனர், அதற்கு உதவிய காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!