
48 Types Of Food Served Madurai DMK General Meeting: திமுகவின் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்கடியில் இன்று நடைபெற உள்ளது. சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். திமுகவின் அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என சுமார் 10,000 பேர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மதுரையில் திமுக பொதுக்குழு
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் துணைத் தலைவர் பதவி உருவாக்கப்படலாம் என்றும் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக நேற்று மதுரை சென்றடைந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவனியாபுரத்தில் இருந்து, ஜீவாநகர், ஜெயந்தி நகர் வழியாக சுமார் 25 கிமீ தூரத்துக்கு ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.
திமுக பொதுக்குழுவில் 48 வகையான உணவுகள்
திமுகவில் பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் 10,000 பேருக்கும் இன்று பிரம்மாண்ட விருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 24 வகையான சைவ உணவுகள் மற்றும் 24 வகையான அசைவ உணவுகள் சுடச்சுட தயாராகி வருகின்றன. இந்த உணவுகளை சமைக்கும் பணியில் இன்று அதிகாலை முதலே சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சைவ உணவுகளின் லிஸ்ட்
சைவம், அசைவம் என மொத்தம் 48 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட உள்ள நிலையில், சைவ உணவு வகைகளில் வெஜிடபிள் பிரியாணி, ஆனியன் தயிர் பச்சடி, வெள்ளை சாதம், பருப்பு பொடி + நெய், சாம்பார், எண்ணெய் கத்தரிக்காய் காரக்குழம்பு, தக்காளி ரசம், சேமியா பால் பாயாசம், அப்பளம், குல்கந்து பர்பி, பனங்கற்கண்டு மைசூர்பா, கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரகறி, சவ்சவ் கூட்டு, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ஃபிரை, வெண்டைக்காய் ஃபிரை, காளிபிளவர் சில்லி, வெஜ் கட்லெட் + சாஸ், பருப்பு வடை, சப்பாத்தி, சிப்பி காளான் குழம்பு, தயிர், இஞ்சி புளி ஊறுகாய் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அசைவ உணவுகளின் லிஸ்ட்
அசைவ உணவுகளை பொறுத்தவரை மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, தயிர் வெங்காயம், சாதம், எலும்பு தால்சா, அயிரை மீன் குழம்பு, மட்டன் காடி சாப்ஸ், மட்டன் உப்புக்கறி, மட்டன் கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரமீன் வறுவல், ரசம், மோர், ஊறுகாய், ஜிகர்தண்டா, ஐஸ் க்ரீம், பீடா, வாழைப்பழம், மட்டன் குழம்பு, பன் அல்வா, மட்டன் எண்ணெய் சுக்கா ஆகியவை தயாராகி வருகின்றன.