கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் அருகாமையில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் தேவையில்லலாமல் வெளியில் வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று அதிகாலை ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்தது. இந்த காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலே கவுண்டன் ஏரிப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளதால் சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், ஒபேப்பாளையம், கொம்பேப்பள்ளி, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு வனத்துறை ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு செல்ல வேண்டாம், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
தற்போது பொங்கல் பண்டிகை அடுத்தடுத்து நாள்களில் கொண்டாடப்படுவதால் காட்டு யானைகளை வனத்துறையினர் வேறு வனப்பகுதிக்கு விரட்டாமல் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.