ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் செல்லும் அதிகப்படியான ரசாயன நுரையால் வேளாண்மை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு கர்நாடகா நீர்பிடிப்பு பகுதியான நந்திமலையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் மூலம் நீர்வரத்து வந்துக்கொண்டிருக்கிறது. கோடை, மழைக்காலம் என எந்த நேரத்திலும் நீர்வரத்து இருக்கும் என்பதால் வற்றாத நதியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களை கடந்த கடலில் கலக்கிறது.
இப்படியான தென்பெண்ணை ஆற்றின் கர்நாடகா மாநிலத்தின் ஆற்றங்கரையோரமாக உள்ள தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரில் ரசாயான கழிவுநீர் கலப்பதால் நீரில் ரசாயன நுரைகள் பொங்கி காட்சியளிக்கிறது.
கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 40.51 அடியில் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 500 கனஅடிநீர் வரத்தாக உள்ளநிலையில், அது அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் நுரைப்பொங்கி, துர்நாற்றம் வீசி நீர் செல்வதால் வேளாண்மை பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.