தக்காளி விலை தொடர் உயர்வால் தோட்டங்களில் தற்போது தக்காளி திருட்டை தடுக்க தோட்டங்களை சுற்றி வேலி அமைத்தும், தடுப்பு கோணி பை விரிப்பு (கிரீன் மெஷ் )அமைத்தும் விவசாயிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பல பகுதிகளில் தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். ஓசூர் பகுதிகளில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்தது. தக்காளியை அனைத்து தரப்பு மக்களும் தினமும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ ரூ.150, 160 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதனால் தக்காளியை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு சென்னையில் மட்டும் நியாய விலை கடைகள் மூலம் ரூபாய் 60க்கு தக்காளியை விற்பனை செய்கிறது. ஆனால் மற்ற இடங்களில் தக்காளி கூடுதல் விலைக்கு தான் இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல்களுக்கு வாங்கி செல்கிறார்கள்.
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல், நோய் தாக்கம் காரணமாக பெரும்பாலும் தக்காளி தோட்டங்கள் அழிந்து விட்ட நிலையில் மீதமுள்ள தக்காளி தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்து ஓசூர் மார்க்கெட்டிற்கும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்நிலையில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தக்காளியை பறித்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி திருட்டை தடுக்க முள் வேலி அமைத்தும், தோட்டத்தை சுற்றி கோணிப் பை விரிப்பு (கிரீன் மெஷ்) கட்டி இரவு பகலாக கண்விழித்து காவல்காத்து வருகின்றனர்.