தமிழகத்தில் 95 வயது முதியவர் கொரோனாவிற்கு பலி...!

By Manikandan S R SFirst Published Apr 14, 2020, 9:30 AM IST
Highlights
தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கிறார். 
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தினமும் 50 நபர்களுக்கு குறையாமல் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 எட்டியிருக்கிறது. இந்திய அளவில் தமிழ்நாடு கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணம் அடைந்து இருப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறித்திருக்கிறார். அவரது உடல் கொரோனாவால் பலியானவர்களுக்கு அரசு வகித்திருக்கும் விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக அதிகரித்திருக்கிறது. தமிழக சுகாதாரத் துறை தரப்பில் இருந்து இன்னும் இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
click me!