மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அதே பள்ளி ஆசிரியர் தற்கொலை.. கடிதத்தில் குறிப்பிட்டவர் இவர்தானா?

By vinoth kumarFirst Published Nov 25, 2021, 8:13 AM IST
Highlights

மாணவி எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கரூரில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் திடீர் திருப்பமாக அப்பள்ளியை சேர்ந்த சரவணன் என்ற ஆசிரியர் மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார்.  மாணவி எழுதிய கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூரில் மாணவ ,மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கரூர் மாணவி தற்கொலை செய்த அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சரவணன்(42) தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில்  உள்ள மாமனார் வீட்டுக்கு தனியாக சென்ற சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இவருக்கும் பள்ளி மாணவிக்கும் தொடர்பு உண்டா அல்லது என்ன காரணத்திற்காக இவர் தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஆசிரியரின் மனைவி ஜெயந்தி(42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

click me!