காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹரிஹரன் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹரிஹரன் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (24). சலூன் கடை நடத்தி வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த ஆறு மாத காலமாக ஹரிஹரனுக்கு அப்பெண் வீட்டாருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகையால், கல்லூரி மாணவி, ஹரிஹரனை சந்திப்பதை தவிர்த்துள்ளார். ஆனால், ஹரிஹரன் தொடர்ந்து மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹரிஹரனை கண்டிப்பதற்காக கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பகுதிக்கு அவரை வரவழைக்கும்படி மாணவியின் உறவினர்கள் கூறியதால், அந்த மாணவி ஹரிஹரனிடம் செல்போனில் பேசியுள்ளார். இதையடுத்து, மாணவியை சந்திக்க ஹரிஹரன் வந்தபோது, அங்கு மறைந்திருந்த மாணவியின் உறவினர்கள், ஹரிஹரனை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் ஹரிஹரனை கத்தியால் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஹரிஹரன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிஹரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தந்தை வேலன், சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஹரிஹரன் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.