கரூரில் ஜோதிமணிக்கு எதிராக கோஷ்டிகள் குடுமிபிடி... தம்பிதுரையை காங்கிரஸே ஜெயிக்க வைக்குமா?

By Asianet TamilFirst Published Mar 18, 2019, 7:43 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் கரூர் தொகுதியில் காங்கிரஸார் குஷ்தி போடத் தொடங்கியுள்ளார்கள். 
 

கோஷ்டிக்கு பெயர்போன காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 10 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் தலைவர்கள் முட்டிமோதி வருகின்றனர். குறிப்பாக கரூர் தொகுதியை ஜோதிமணிக்காக காங்கிரஸ் தலைமை கேட்டு வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. ராகுல் காந்தியிடம் உள்ள தனிப்பட்ட செல்வாக்கால் ஜோதிமணி கரூர் வேட்பாளராகிவிடுவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். அதற்கேற்ப சில மாதங்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர் சின்னசாமிக்கு மாவட்ட தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்ததாகவும் ஜோதிமணி மீது புகார் எழுந்தது.
இதற்கிடையே கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் கரூர் தொகுதியில் 400 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியனும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார். இதேபோல மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபும் விருப்ப மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார்.  
இந்நிலையில் கரூரில் ஒரு கூட்ட அரங்கில் பேங்க் சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அப்போது, கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்தும், பேங்க் சுப்பிரமணியனை வேட்பாளராக அறிவிக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதேபோல மாநில விவசாய அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கரூர் தொகுதிக்கு ஜோதிமணியை தேர்வு செய்யக் கூடாது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு சீட்டை வீணடித்து விடக்கூடாது” என்று தெரிவித்தார்.
ஆனால், ஜோதிமணிக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஏற்கனவே மாவட்ட தலைவர் மாற்றத்துக்கு பிறகு கரூரில் கோஷ்டி பூசல் அதிகரித்திருந்தது. தற்போது கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வை வைத்து அக்கட்சியில் கோஷ்டி பூசல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அதிமுக சார்பில் இந்தத் தொகுதியில் பலம் பொருந்திய தம்பிதுரை போட்டியிட உள்ளார். ஆனால், தொகுதியைப் பெற காங்கிரஸ் கோஷ்டிகள் எல்லா வேலைகளையும் தொடங்கிவிட்டனர். போகிறபோக்கைப் பார்த்தால், தம்பிதுரையை காங்கிரஸ் கோஷ்டிகளே வெற்றி பெற வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கூட்டணி கட்சியான திமுக உள்ளது.

click me!