அரவக்குறிச்சியில் முட்டி மோதும் அதிமுகவினர்... செந்தில் பாலாஜியை எதிர்க்க ஆர்வமோ ஆர்வம்!

By Asianet Tamil  |  First Published Apr 11, 2019, 9:44 AM IST

காலியாக உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
 


அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19 அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிட உள்ளார். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இந்த முறை திமுக வேட்பாளராக மாறிவிட்டதால், அதிமுக வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதிமுக மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் மார்கண்டேயன் ஆகியோர் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். இதேபோல 2011-ல் அரவக்குறிச்சியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த செந்தில்நாதன், ஜெயலலிதா பேரவை இணைச்செயலர் பரமசிவம், கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் உள்ட்டோரும் அரவக்குறிச்சி வேட்பாளராக அதிமுக தலைமையை அணுகியிருக்கிறார்கள்.


கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் அரவக்குறிச்சியில் நடைபெற்றபோது, தற்போதைய முதல்வர் எடப்பாடி பன்னீர்செல்வம் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இருந்தார். அவருடைய தலைமையில் 10 அமைச்சர்கள் அரவக்குறிச்சி தேர்தலுக்காகப் பணியாற்றினர். இந்த முறை தங்கமணி அல்லது வேலுமணி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் எதிர்கொள்ளப்படும் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

Latest Videos


செந்தில் பாலாஜி மீது அதிமுகவினர் மட்டுமல்ல, அமமுகவினரும் கடும் கோபத்தில் உள்ளனர். அவரை எப்படியும் தோற்கடிக்க இந்த இரு கட்சிகளுமே முனைப்பு காட்டும் என்பதால், வெற்றி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏப்ரல் 18-ம் தேதி தேர்தலுக்கு பிறகு அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!