20 ஆண்டுகளுக்கு பின் உயிர்பெற்ற ஆத்துப்பாளையம் அணை..! அமைச்சரின் தீவிர முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு..!

By Manikandan S R S  |  First Published Nov 8, 2019, 12:27 PM IST

கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆத்துப்பாளையம் அணை சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே இருக்கிறது ஆத்துப்பாளையம் அணை. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1980ம் ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு 1992 முதல் இந்த அணை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் கிடைத்திருக்கிறது. அதன்பிறகு திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும்  சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் பாழாயின. இதன்காரணமாக அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் அணையின் கால்வாய்கள், நீர்த்தேக்க படுக்கை போன்றவை  பராமரிப்பு இல்லாமல் சேறுசகதியோடு, மதகுகள் சேதமுற்றும் அணை முற்றிலும் அழியும் தருவாயில் இருந்தது. இந்தநிலையில் அந்த பகுதியில் இருக்கும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அணையின் நிலையை போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர், அவரது நேரடி கண்காணிப்பில் அணை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டார்.

அணையின் நீர்வரத்து பகுதிகள் மற்றும் வாய்க்கால்கள் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டன. இதன்காரணமாக சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்துப்பாளையம் அணையில் மீண்டும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அணையில் இருந்து தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர முயற்சியால் கரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியில் இருக்கும் விவசாய நிலங்கள் வரை தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டு வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: குட்டியின் யானையின் காலில் பழுத்திருக்கும் கட்டி..! வலியால் வனப்பகுதிக்குள் செல்லமுடியால் தவிப்பு..!

click me!