வேலம்மாள் பாட்டி வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய போட்டோகிராபருக்கு நேர்ந்த கதி..!

By vinoth kumarFirst Published Aug 27, 2022, 4:21 PM IST
Highlights

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. இவர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளின் போது துணிச்சலாக செயல்பட்டு புகைப்படம் எடுத்துள்ளார். 

சிரிப்பால் மிகவும் பிரபலமடைந்த வேலம்மாள் பாட்டிக்கு தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை, குடிசை மாற்று வாரிய வீடு ஆகியவை கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், முதல்வரின் பாராட்டை பெற்ற புகைப்பட கலைஞருமான ஜாக்சன் ஹெர்பியா பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. இவர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளின் போது துணிச்சலாக செயல்பட்டு புகைப்படம் எடுத்துள்ளார். ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியபோது இவர் எடுத்த புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. பிரதமர் மோடி, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்திருந்தபோது பாதிப்பின் தீவிரத்தை விளக்க வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இவர் எடுத்த படங்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க;- ஜெயலலிதா மரணம் விசாரணை அறிக்கையில் என்ன உள்ளது? ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு தகவல்..!

இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் ஜாக்சன் ஹெர்பி துணிவுடன் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை எப்படி மயானத்தில் எரிக்கிறார்கள் என்று கவச உடை அணிந்துக் கொண்டு  புகைப்படங்களை எடுத்து வெளியிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கொரோனா வார்டிற்கு உள்ளே சென்று அதையும் புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தார். 

அந்த வகையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தின் போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் என்கிற ஏழை மூதாட்டி, ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை ஜாக்சன் ஹெர்பி எடுத்திருந்தார். இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் ஃபேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் பாட்டியை புகைப்படம் எடுத்து வைரலாக்கிய அதே புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, சில தினங்களுக்கு முன்பு வேலம்மாள் பாட்டியின் வீடியோ ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் வேலம்மாள் பாட்டி, “முதலமைச்சரய்யா... நேரில் பார்க்கும்போது நீங்கள் வீடு தருகிறேன் என்று சொன்னீங்க. நான் கலெக்டர் ஆபீஸ்க்கு போயிட்டு இருக்கேன். இதுவரை தரவில்லை. தெருவில் நிற்கிறேன் அய்யா!” என அந்த வீடியோவில் வேதனையோடு கூறியிருந்தார். ஏற்கனவே முதியோர் உதவித்தொகை வாங்கிய வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க;-  ஸ்ரீமதி உடலில் கைரேகைகள்! அதிக காயங்கள் இருந்ததாக கூறியும் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்

இந்நிலையில், மாநகராட்சியின் செயல்பாடுகளைப் புகைப்படம் எடுத்துவந்த ஜாக்சன் ஹெர்பி, வெளிமாவட்ட அமைச்சர்கள் வரும்போது உள்ளூர் புள்ளிகளைக் கண்டுகொள்ளாமல், அவர்களைப் புகைப்படம் எடுப்பதிலேயே அதிக அக்கறைகாட்டினாராம். இந்த குற்றச்சாட்டை அடுத்து ஜாக்சன் ஹெர்பியை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக புகைப்படக் கலைஞர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. வேலம்மாள் பாட்டிக்கு ஒரு விடிவு காலம் பிறந்தது போல் எனக்கும் ஒரு விடிவு பிறக்க வேண்டும் கூறி தமிழக முதல்வருக்கே உருக்கமாக கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. 

click me!