இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டு தமிழகத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1,242 அதிகரித்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் 14 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது நாகர்கோவிலில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 68 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு சளி மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஒரு பெண் அதே மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரும் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மற்றொரு பெண்ணும் மரணம் அடைந்திருக்கிறார். மூன்று பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளின் முடிவிலேயே அவர்கள் கொரோனாவால் பலியானார்களா என்பது குறித்து தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மூன்று பெண்கள் மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.