கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் காய்ச்சல் மற்றும் இருமலால் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரையில் 40பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். இதனிடையே கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் காய்ச்சல் மற்றும் இருமலால் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டாரைச் சேர்ந்த இளைஞரும் சிகிச்சையில் இருந்தனர். தற்போது இருவரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலையில் ராஜக்கமங்கலம் சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து ஒரே நாளில் கொரோனா வார்டில் இருந்த மூன்று பேர் பலியாகி இருக்கின்றனர்.
மூவருக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்கிற அச்சத்தில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது மூவரும் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுகளின் முடிவிலேயே அவர்களுக்குகொரோனா பாதிப்பு இருந்ததா? என்பது தெரியவரும். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கொரோனா வார்டில் இருந்த 2 பேர் உயிரிழந்திருந்தனர் அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.