தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை..! மக்கள் உற்சாகம்..!

By Manikandan S R SFirst Published Apr 24, 2020, 2:38 PM IST
Highlights

தென் மாவட்டங்களில் கோடை மழை கடந்த சில நாட்களாக பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயில் ஏற்படுத்திய வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கோடை மழை குளிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்துள்ளது.

தென் மாவட்டங்களில் கோடை மழை கடந்த சில நாட்களாக பெய்து வருவதால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதன்படி தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் அணைகளுக்கு வரும் நீர்மட்டத்தின் அளவு கிடுகிடுவென அதிகரித்து இருக்கிறது. மாவட்டத்தின் பிற பகுதிகளான பூதப்பாண்டி, ஆணை கிடங்கு, இரணியல், அடையாமடை, முள்ளங்கினாவிளை போன்ற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

அதேபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது. மாலை 5 மணி அளவில் பாவூர் சத்திரம், சாலைப்புதூர், பெத்தநாடார்பட்டி, கீழப்பாவூர், திப்பனம்பட்டி ஆகிய இடங்களில் பெய்யத் தொடங்கிய கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மேலும் தென்காசி, குற்றாலம், இலஞ்சி, வல்லம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான அளவில் சாரல் மழை பெய்தது. கோடை வெப்பத்தை தவிர்க்கும் விதமாக வந்த மழை மக்களுக்கு குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!