அதிவேகமாக வந்த கார் மோதியதில் கர்ப்பிணி பெண் மகனுடன் பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இருக்கும் புதிய கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி திலகவதி(35). இந்த தம்பதியினருக்கு திருமுருகன்(4) என்கிற மகன் இருக்கிறான். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுவன் எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். சத்தியமூர்த்தி மீன் பிடி தொழில் பார்த்து வருகிறார்.
திலகவதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மகனை பள்ளியில் விடுவதற்காக அங்கிருக்கும் பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இ.சி.ஆர். சாலையில் இருக்கும் தடுப்புச்சுவர் வளைவு பகுதியை இருவரும் கடக்க முயன்றனர். அப்போது சாலையில் கார் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக திலகவதி மற்றும் அவரது மகன் திருமுருகன் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து இறந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே சத்தியமூர்த்தி மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றிருந்தார். அவருக்கு வாக்கி டாக்கி மூலமாக மனைவி மற்றும் மகன் இறந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடடனடியாக கரை திரும்பினார். சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி மனைவியையும், 4 வயது மகனையும் பார்த்து அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.
Also Read: திருப்பதியில் இனி இலவச லட்டு..! தேவஸ்தானம் அதிரடி..!