ஈரோடு மாவட்டதில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக தாறுமாறாக உயர்ந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 105 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை சிகிச்சையில் வைத்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு தமிழகத்திலும் மிக கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதரத்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டதில் கொரோனா வார்டில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோட்டைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வாலிபர் மரணமடைந்ததாக தற்போது தகவல் வந்துள்ளது. எனினும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அவை வந்த பிறகே வாலிபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.