தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி.. ஈரோட்டில் ஒரே நாளில் 13 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர்

By karthikeyan V  |  First Published Apr 15, 2020, 3:58 PM IST

ஈரோட்டில் கொரோனாவிலிருந்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.
 


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 15 நாட்களாக தாறுமாறாக அதிகரித்துவந்த நிலையில், நேற்று வெறும் 31 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது, தமிழ்நாட்டிற்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கும் செய்தியாக இருந்தது. 

அதனால் தாறுமாறாக எகிறி கொண்டிருந்த பாதிப்பு எண்ணிக்கை, 1173லிருந்து நேற்று 1204ஆக அதிகரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்தபடியாக கோவையில் 126 பேரும் திருப்பூரில் 79 பேரும் ஈரோட்டில் 64 பேரும் என கொங்கு மண்டலத்தில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. 

Latest Videos

undefined

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று வரை 81 பேர் குணமடைந்திருந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் சிகிச்சை பணிகளும் கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் போதிலும், பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்தது.

 இந்நிலையில், ஈரோட்டில் இன்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது நற்செய்தியாக அமைந்துள்ளது. ஈரோட்டில் மொத்தம் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர். அவர்களில் 5 பேர் ஏற்கனவே குணமடைந்துவிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த 58 பேரில் 13 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், ஒரே நாளில் 13 பேர் குணமடைந்து தமிழ்நாட்டிற்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளனர். அவர்களை மருத்துவர்கள் கைதட்டி வழியனுப்பிவைத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அனுப்பிவைத்தார். கொரோனாவிலிருந்து குணமடைந்த 13 பேரும் இரண்டு வாரங்கள் வீட்டு கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

click me!