தற்போது ஈரோடு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். இதுவரையில் 9 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஈரோடு அருகே இருக்கும் பெருந்துறையைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்த முதியவருக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் மூளை நரம்பு பாதிப்பு பிரச்சனைகள் இருந்துள்ளது. அவரது ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் அது வந்த பின்னரே முதியவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? என்பது குறித்து தெரியவரும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதனிடையே உயிரிழந்த முதியவர் வசித்து வந்த பெருந்துறை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சீல் வைத்து சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.