அதிமுக சார்பாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் மரணமடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களுக்காக, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து வருகிறது.
சென்னை பள்ளிக்கரணை அருகே சுபஸ்ரீ என்கிற பெண் நேற்று முன்தினம் மாலை தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையின் நடுவே அதிமுக சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக எச்சரித்திருக்கிறது. இனி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது என்று அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சாலைகளிலும் முக்கிய இடங்களிலும் மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு வைக்கப்படும் பேனர்களுக்கு முறையான அனுமதி பெற்று குறிப்பிட்ட நாட்களுக்கு தான் வைக்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் இதை யாரும் முறையாக பின்பற்றுவதில்லை. அதன் காரணமாகவே இதுபோன்ற விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.
சுபஸ்ரீ என்கிற பெண் உயிரிழந்ததிற்கு காரணம் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையும் மாநகராட்சி அதிகாரிகளும் தான் என்று உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்களுக்காக காவல்துறை இரண்டு நாட்களாக வழக்குகள் பதிவு செய்து வருகின்றது. ஈரோட்டில் மட்டும் ஒரே நாளில் 44 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. அதே போல கும்பகோணத்தில் 9 வழக்குகளும் திருவிடைமருதூர் பகுதியில் 8 வழக்குகளும் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதே போல தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு உயிர்போன பிறகு தான் அதிகாரிகளே சட்டத்தை மதித்து பின்பற்றுவார்களா என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.