மனைவி இறந்த சோகத்தில் கணவருக்கு ஏற்பட்ட கொடுமை.. அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்!!

By Asianet Tamil  |  First Published Sep 10, 2019, 5:31 PM IST

ஈரோடு அருகே மனைவி இறந்து போன துக்கத்தில் கணவரும் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருக்கும் ஆலயங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்(83). இவரது மனைவி காமாட்சி அம்மாள் (78). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் இருக்கின்றனர். இதனால் பழனியப்பனும் காமாட்சி அம்மாளும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்தோடு இருந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதன்காரணமாக அவ்வபோது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனிடையே உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட காமாட்சி அம்மாள் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியப்பன் அவரது மனைவியின் உடலைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

உறவினர்கள் காமாட்சி அம்மாளுக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். அப்போது மிகவும் சோர்ந்து போயிருந்த பழனியப்பன் திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது மகன், மகள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவர்கள் இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இரண்டு பேரின் உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கு செய்தனர். மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்தது, சாவிலும் இணைபிரியா தம்பதி என்று அந்த பகுதி மக்களால் போற்றி பேசவைத்தது. 

click me!