காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவவேண்டும் – ஜூஹி சாவ்லா பெருமிதம்

By karthikeyan V  |  First Published Feb 1, 2022, 6:03 PM IST

”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்” என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.
 


”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்” என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளை சந்திப்பதற்காக அவர் இன்று (பிப்ரவரி 1) ஈரோடு வந்தார். கோபிச்செட்டிப்பாளையம் மேவானி கிராமத்தில் நடந்த இந்நிகழ்வில் மரம்சார்ந்த விவசாயத்தால் தங்கள் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விவசாயிகள் ஜூஹி சாவ்லா அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

Latest Videos

undefined

விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு சாவ்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் இங்கு வந்து விவசாயிகளை சந்தித்து பேசுவதற்கு முன்பு இவ்வியக்கத்தின் மூலம் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்த ‘எண்ணிக்கை’ அடிப்படையிலான தகவல்கள் தான் எனக்கு தெரியும். ஆனால், விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிறகு தான் அவர்களின் வாழ்விலும், சுற்றுச்சூழலிலும் நடந்துள்ள ஏராளமான மாற்றங்கள் குறித்து தெரிந்து கொண்டேன். பல தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், மகிழ்ச்சியூட்டும் வகையிலும் இருந்தது.

வறட்சியாலும், குடும்ப சூழல்களாலும் நிலத்தை விற்க முடிவு எடுத்த விவசாயிகள் கூட காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். அவர்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது. பல விவசாயிகளின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்து இருப்பதை அறிந்து கொண்ட போது மகிழ்ச்சியாக உள்ளது. பொருளாதாரம் மட்டுமின்றி நிலத்தின் மண் வளமும் நன்கு மேம்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

இத்தகைய அற்புதமான மாற்றங்கள் நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் சத்குரு அவர்களுக்கும், ஈஷா தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விவசாயிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பார்த்த பிறகு சத்குரு மீதான மதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அவர் முன்னெடுத்துள்ள இந்தப் மாபெரும் பணியில் என்னால் ஆன சிறு உதவிகளை ஆரம்பம் முதல் நான் செய்து வருகிறேன். பாலிவுட் துறையில் இருக்கும் என்னுடைய நண்பர்களின் பிறந்த நாட்களின் போது 500, 1000 மரக்கன்றுகளை நடுவதற்கு நிதி அளித்து வருகிறேன். காவேரி கூக்குரல் இயக்கம் குறித்து இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். இது பாலிவுட் வட்டாரத்தில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

நான் என்னுடைய கடந்த பிறந்த நாளின் போது, ‘எனக்கு பிறந்த நாள் பரிசாக மரங்கள் நடுங்கள், வேறு எந்தவிதமான பரிசும் அளிக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்தேன். ஆச்சரியப்படும் வகையில், என்னுடைய நண்பர்களும், ரசிகர்களும் சுமார் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதியுதவி அளித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதன்மூலம், காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி திரட்டும் என்னுடைய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் மீது அதிக ஆர்வம் காட்டி வரும் ஜூஹி சாவ்லா அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்த நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆரம்பம் முதல் ஆதரவு அளித்து வருகிறார். அதுமட்டுமின்றி, காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் விவசாய நிலங்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நிதி திரட்டி தருவதாகவும் அவர் உறுதி அளித்து இருந்தார். அந்த வகையில் அவர் இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு நிதி திரட்டி வழங்கியுள்ளார்.

குறிப்பாக, பாலிவுட் நடிகர்கள் ஷாரூகான், ரிஷி கபூர், ஆயுஷ்மான் குரானா, பாடகி ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், பட தயாரிப்பாளர்கள் அனுபம் கேர், யஷ் சோப்ரா உள்ளிட்டோரின் பிறந்த நாட்களின் போது சாவ்லா அவர்கள் மரக்கன்றுகள் நட நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயி திரு. செந்தில்குமார் அவர்களின் தோட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஜூஹி சாவ்லா அவர்கள் அந்த தோட்டத்திலேயே விவசாயிகளுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டார்.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கடந்த 2 ஆண்டுகளில் 2.1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். மேலும், 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர்.
 

click me!