தொடர் மழையால் வேகமாக நிரம்பிய அணைகள்.. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு… 10 கிராம மக்களுக்கு எச்சரிக்கை.!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 6:23 PM IST
Highlights

நடப்பாண்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது.

நடப்பாண்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை தற்போது மீண்டும் நிரம்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்துவரும் கனமழையால், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே இருமுறை முழு கொள்ளளவை எட்டியிருந்தது. இந்தநிலையில் தற்போது பெய்துவரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 102 அடியை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.

இதனிடையே பில்லூர் அணையும் கனமழையால் நிரம்பியதால் அங்கிருந்து வினாடிக்கு பத்தாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆற்றின் கரையோரம் உள்ள கொடிவேரி, அடசப்பாளையம், நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். கால்நடைகளை குளிப்பாட்டவும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!