தர்மபுரியில் மனித கழிவுகளை வெறும் கைகளால் அள்ள வைத்து பேரூராட்சி தலைவர் அட்டூழியம்

By Velmurugan sFirst Published Feb 6, 2023, 6:51 PM IST
Highlights

தர்மபுரி மாவட்டத்தில் பராமரிப்பில்லாமல் இருந்த கழிப்பிடம், மனிதக் கழிவுகளை மனிதர்களே தங்கள் கைகளால் அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 15 ஆவது வார்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு குளியலறை வசதியுடன் பெண்கள், ஆண்கள் என இரு பாலரும் பயன்படுத்தக்கூடிய 12  கழிப்பிட அறை பொதுக் கழிப்பிடமாக பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டது.

பராமரிப்பு இல்லாததால் பொது கழிப்பறை அனைத்தும் தண்ணீர் இன்றி பழுதடைந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. தற்போது திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரான வெங்கடேசனும், பேரூராட்சி செயல் அலுவலராக சித்திரைக்கனியும் இருந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மலம் அள்ளும் பணியை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,

இது தொடர்பாக தூய்மை பணியாளர்களின் சங்கம் சார்பில்  மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில். 15 வது வார்டு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கியது.

அந்த பணிக்காக பொதுக் கழிப்பிடத்தில் உள்ள மலத்தை அள்ளுவதற்காக தூய்மை பணியாளர்கள் இருவரை பேரூராட்சி அலுவலர் சித்திரைக்கனியும் திமுக-வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் வெங்கடேசனும் வற்புறுத்தி பணி அமர்த்தியதாக கூறப்படுகிறது.

அவர்கள் வழங்கும் பணியை செய்யாவிட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டல் விடுத்ததால் வேறு வழி இல்லாமல் பேரூராட்சி பணியாளர்கள் இருவரும் மலத்தை தங்களது கைகளால் அள்ளி கழிப்பிடத்தை சுத்தம் செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரக்கனி கூறும் போது தொழிலாளர்களை மலம் அள்ளுவதற்கு தான் காட்டாயப்படுத்தவில்லை எனவும் தன்னை பழிவாங்குவதற்காக தொழிலாளர்கள் இவ்வாறு குற்றச்சாட்டு தெரிவித்து அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு விசயத்தையும் பிளான் பண்ணி செய்யனும்: மின்வாரியத்தை சாடும் அன்புமணி

இது குறித்து  திமுக அரசுக்கு முறையாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளனர். இந்த அவல நிலை குறித்து மாரண்டஅள்ளி பேரூராட்சி திமுக தலைவர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேரூராட்சி ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் இணைப்புடன் பொய்யாக இணைக்கப்படும் ஆதார் எண்கள்; வீட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி

click me!