கடலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற வாலிபர் பனை மரத்தில் மோதி பலியாகியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கிறது புதுக்குப்பம் மீனவ கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆகாஷ். அங்கிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரில் ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் ஒன்று இருந்துள்ளது. அதில் தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்திருகிறார். தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் 'One day speed will kill's me dont cry because smiling' என்று எழுதியிருக்கிறார். வாகனத்தில் அதிவேகத்தில் செல்வதையே தனது வழக்கமாக ஆகாஷ் கடைபிடித்து வந்திருக்கிறார்.
இதனிடையே சிதம்பரம் அருகே இருக்கும் சின்னாடிக்குழி கிராமம் அருகே இருக்கும் சாலையில் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த பனைமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஆகாஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மரணடைந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேக பயணம் ஆபத்தில் முடியும் என்று தெரிந்திருந்தும் அதை கையிலெடுத்து உயிரிழந்திருக்கும் இளைஞரால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருக்கிறது.