என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடலூர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் வரும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். கடலூர் மாவட்ட மக்களுக்கும் , மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்எல்சி.
என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது நமது உரிமைக்கான பிரச்சனை. 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை. விவசாய பட்ஜெட்; ஒரு பக்கம் ஒரு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதை விடமாட்டேன். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது விலையை கொஞ்சம் ஏற்றி என்எல்சி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.
நான் கேட்கிறேன் அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா? என்றும், திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். இந்த மாவட்ட அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் எங்கே? இப்படியே போனால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது. என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா? என்றும், ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை” என்றும் பேசினார்.
அனுமதியின்றி என்எல்சி நிறுவனத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!