விருத்தாசலம் அருகே இஸ்லாமியர் ஒருவரின் நிலத்தில் பழமையான நடராஜர் சிலை ஒன்று கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலடி இருக்கிறது பழையபட்டினம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அப்துல் ஜலீல்(75). விவசாயியான இவருக்கு சொந்தமாக விளைநிலங்கள் இருக்கின்றது. இந்த நிலையில் வயலில் வாய்க்கால் வரப்பு வெட்டும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணியில் அப்துல் ஜலீல் ஈடுபட்டிருந்தார்.
நான்கு அடி தோண்டிய நிலையில் சிலை ஒன்று இருப்பது போல தென்பட்டிருக்கிறது. இதையடுத்து மேலும் தோண்டி பார்த்தபோது பழமையான நடராஜர் சிலை ஒன்று கிடைத்துள்ளது. அதனுடன் முக்காளிகள், பூஜை மணி ஆகியவை தலா நான்கும், 3 சூலமும், சோம்பு, தாம்பூலத்தட்டு, தீர்த்தக்குடம், தட்டு ஆகியவை தலா இரண்டும், ஒரு பானையும் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து உடனடியாக அப்துல் சலீம் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார்.
காவல்துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோர் விவசாய நிலத்திற்கு விரைந்து வந்தனர். நிலத்தில் கிடைத்த நடராஜர் மற்றும் பொருள்களை பார்வையிட்ட அவர்கள்,இவை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க கூடும் என்றும் தெரிவித்தனர். மேலும் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகே உண்மையான காலம் தெரிய வரும் என்றும் கூறினர். இதைத்தொடர்ந்து சிலை குறித்த ஆய்வுகள் முடிந்த பிறகு, அதை கோவில் கட்டி வழிபாடு நடத்துவதற்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை விடுத்தனர். தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகு அது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.
பழையபட்டினம் கிராம பகுதியில் இதற்கு முன்பாக பழமையான முதுமக்கள் தாழி போன்ற பல பொருட்கள் கிடைத்துள்ளன. இதனால் கீழடி போன்றே இங்கும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 104 வயதில் மரணமடைந்த கணவர்..! துக்கம் தாளாமல் உயிர்விட்ட 100 வயது மனைவி..! சாவிலும் இணைபிரியாத தம்பதி..!