உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனின் அழகிய தமிழ் பெயரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர் இளவேனில் வாலறிவன். துப்பாக்கி சுடும் வீராங்கணையான இவர் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.
அவருக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இளவேனில் காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து "இளவேனில் வாலறிவன்" என்கிற பெயர் சமூக ஊடகங்களை கலக்கி வருகிறது. அவர் தங்கப்பதக்கம் வாங்கியதை விட அவரின் அழகிய தமிழ் பெயருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பலர் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. நவீன யுகத்தில் ஏதேதோ பெயர்களை வைப்பதை விட இதுபோன்ற அழகிய தமிழ் பெயர்களை பெற்றோர்கள் இனி வரும் காலங்களில் வைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கூறி இருக்கின்றனர்.
உலகளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் தமிழ் பெயர் அதிகளவில் பேசுபொருளாக ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.