பக்கத்துக்கு வீடுகளுக்கு பூட்டு போட்டு விட்டு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோனுரை சேர்ந்தவர் சாந்தப்பன். இவரது மனைவி பூங்கோதை (61) . இவர்கள் எப்போதும் இரவு நேரத்தில் தூங்கும் போது காற்றுக்காக வாசல் கதவை திறந்து வைத்து தூங்குவது வழக்கமாம். இதை மர்ம நபர் ஒருவர் நோட்டம் பிடித்துள்ளார்.
சம்பவத்தன்றும் கதவை திறந்து வைத்து பூங்கோதை தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பூங்கோதை கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்து எழுந்த பூங்கோதை "திருடன் திருடன்" என கூச்சலிட்டுள்ளார். எனினும் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தான் தெரிந்தது, பூங்கோதையின் வீட்டின் இருபுறமும் உள்ள வீடுகளின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பூங்கோதையின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்துவிட கூடாது என்று சாமர்த்தியமாக இரு வீடுகளுக்கும் அந்த மர்ம நபர் பூட்டு போட்டு உள்ளார்.
இதுகுறித்து பூங்கோதை பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு, ஒரு படத்தில் சுற்றி இருக்கும் வீடுகளுக்கு பூட்டு போட்டு திருட செல்வார். அந்த மர்ம நபரும் அதே பாணியை இந்த திருட்டு சம்பவத்தில் செயல்படுத்தி உள்ளார் .