நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியும் போச்சா.. திமுக மீது அதிருப்தியில் திருமா..!

By vinoth kumarFirst Published Mar 4, 2022, 1:05 PM IST
Highlights

விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 20 கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளர் ஜெயந்தி வெற்றி பெற்றுள்ளார்.  

கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக - 11, விடுதலை சிறுத்தைகள்- 2, காங்கிரஸ்- 1, முஸ்லிம் லீக் - 1, மனித நேய மக்கள் கட்சி - 1, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1,  மதிமுக - 1 உட்பட திமுக கூட்டணி 18 இடங்களை வெற்றி பெற்றது.  சுயேச்சைகள் - 7,  தேமுதிக - 1, அதிமுக - 3, பாமக - 1 இடங்களை பிடித்தன. இதில், மூன்று சுயேச்சைகள் திமுகவில் இணைந்ததால் கூட்டணி பலம் 21ஆக உயர்ந்தது. 

தனிப்பட்ட முறையில் திமுகவின் பலம் 14ஆனது. இதனால், சேர்மன் பதவி திமுகவை சேர்ந்தவருக்கு கிடைக்கும் என கட்சியினர் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இதனால், திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்தமுள்ள 30 கவுன்சிலர்களில் 20 பேர் திடீரென தலைமறைவாகினர். 

இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கிரிஜா திருமாறனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 20 கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலகத்திற்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கிரிஜா திருமாறன், திமுக சார்பில் ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் நகராட்சி தலைவர் பதவிக்கு தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். இதில், 23 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கனவே பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

click me!