#BREAKING காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி முருகன், கண்ணகி ஆணவ கொலை.. கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published Sep 24, 2021, 12:12 PM IST
Highlights

முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

விருத்தாசலம் அருகே கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ. பட்டதாரியாவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், முருகேசன்- கண்ணகி ஆகியோர் ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், 2 பேரை விடுதலை செய்துள்ளது. 

click me!